பிரபல பெங்காலி திரைப் பாடகர் அனுப் கோஷல் மறைவு

பிரபல பெங்காலி திரைப் பாடகர் அனுப் கோஷல் மறைவு
By: TeamParivu Posted On: December 16, 2023 View: 51

கொல்கத்தா: பிரபல பெங்காலி பாடகர் அனுப் கோஷல் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. அவரது மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
1983-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘மசூம்’ (Masoom) படத்தில் இடம்பெற்ற ‘துஜ்சே நராஜ் நஹி ஜிந்தகி’ (Tujhse Naraz Nahi Zindagi) என்ற பாடல் மூலம் கவனம் பெற்றவர் பாடகர் அனுப் கோஷல். இயக்குநர் சத்ய ஜித்ரேவின் இசையில் சில புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ளார். மேலும், சத்ய ஜித்ரே இயக்கத்தில் கடந்த 1964-ம் ஆண்டு வெளியான ‘Goopy Gyne Bagha Byne’ படத்தில் பெரும்பாலான பாடல்களை அனுப் பாடியுள்ளார்.
1980-ல் சத்ய ஜித்ரேவின் ‘Hirak Rajar Deshe’ படத்தில் இவர் பாடிய பாடல்கள் புகழ் பெற்றவை. இந்தப்ப டத்துக்காக அவருக்கு சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்துக்கு சத்ய ஜித்ரே இசையமைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. பாடகராக மட்டுமல்லாமல் கடந்த 2011-ம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் உத்தரபாரா தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர், உடல் உறுப்புகள் செயலிழப்பால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “பெங்காலி, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடிய பாடகர் அனுப் கோஷலின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..